Powered By Blogger
Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Wednesday, 19 June 2019


நெடுந்தூரப் பேருந்துப் 
பயணங்களிலும்,
நெடுநேர
இளையராஜாவிலும்,
நெடும்பக்கங்கள் நீளும்
புத்தக வாசிப்பிலும்,
துரத்திக் கொண்டிருந்த
தனிமை நீங்கி
உணரப்படும்
உன் அருகாமையும்
பேரின்பமாய்த்தான் இருக்கிறது...

திருவிழா நாளதுவுமா
குளிக்காம கொள்ளாம
சாப்பிடக்கூடாது என்று
அதட்டும் அம்மாவை 
ஏமாற்றி விட்டு
அப்பா ஊட்டி விட்ட
ஒருவாய் சோற்றில்
அடங்கியிருந்தது -
பால்ய காலப்
பண்டிகைக் கொண்டாட்டங்கள்...

Friday, 14 June 2019

(20-July-2017)

வானவில்லின் வடிவங்கள்
************************
சிறுவயதிலிருந்து பல வானவில்களைக் கண்டதுண்டு.. சிறிதும் பெரிதுமாகத் தேய்வும் தெளிவுமாகப் பலதும் அடங்கும்...

வானவில்லைக் காணத் தோன்றும் போதெல்லாம் கண்ணாடி போன்ற பொருளாலான அளவி(Scale)யை வெளிச்ச வெளியில் காட்டிக் காண்போம்...
அறிவியல் வகுப்பொன்றில் முப்பட்டகத்தை வைத்து வடித்து வெள்ளைத் தாளில் வானவில்லைக் கவிழ்த்துக் கொட்டியிருந்தோம்... ஆய்வகங்களில் இன்னும் பல வழிகளிலும் நிறப்பிரிகை நிகழ்த்தியதுண்டு...
இரண்டாண்டுகளுக்கு முன் கைபேசியில் கூடப் படம்பிடிக்க இயலாத அளவிற்கு மிகப் பிரம்மாண்டமான அரைவட்ட வானவில் கூடப் புறநகர் நெடுஞ்சாலையருகே வளைந்து கிடந்தது...
அவ்வப்போது பல்கலைக் கழகத்துப் புல்வெளி நீரூற்றில் காலை உதயக் கதிர்கள் விழுந்து வானவில்லைச் சிதறிக் கொண்டிருக்கும்..
விடுதியில் கடந்திருந்த அன்றாடத் துணி துவைப்பின் சோப்பு நுரைகளுக்குள்ளும் சுருண்டு படுத்திருக்கும்... இன்னும் சில பொருட்களின் பளபளப்பிலும் தான்...
கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குப் பின்பான இன்றைய மாலையில் தான், கிழக்கின் கீழே கருமேகப் பிண்ணனி சிறிய வானவில் ஒன்றைத் தோய்த்து அப்பியிருந்தது...

பண்டிகை நாட்களின் 
நடு இரவுகளில் எழுந்து 
சுண்ணாம்பு கரைத்து
தார்ச்சாலைகளில் வாழ்த்தெழுதிய
பால்யத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்...

இடியிடிக்கும் இந்த 
மழைநாளின் தனிமையை 
விடுத்தோடி வந்து, 
மேற்பூச்சுப் பூசாத 
நம் பால்யகாலச்  
செங்கல் வீட்டின் மண்தரையில் 
ராந்தலொளியைச் சுகித்தவாறு 
கதைக்க மாட்டோமா அப்பா...
              6ம் வகுப்பு... ஆரம்பப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளிக்கு மாறிய தருணம்... முதல் முறை ஓவியத்தில் வாங்கிய பரிசு... முதன்முதலாக இந்த வயதில் தான் பள்ளிக்குச் சென்று வர அப்பா மிதிவண்டி வாங்கித் தந்திருந்தார்...
           அப்பா எனக்குத் தனித்து இயங்குதலைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்த வயதும் இது தான்... இந்நாள் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களில் கல்லூரிகளில் சேர்க்கையின் போதும் Tc வாங்கும்போதும் கையெழுத்திட மட்டுமே வந்திருக்கிறார்... கவிதை, கட்டுரைப் போட்டிகள், பரிசுகள், பயணங்கள், தேர்வுகள், இலக்கிய சந்திப்புகள், பட்டமளிப்பு விழா ,பல்வேறு பகுதிகளின் புத்தகக் கண்காட்சிகள் என்று எத்தனையோ நிகழ்ந்து விட்டன... எங்கேயும் போக வேண்டாமென்று தடுத்ததில்லை... உடன் வந்ததுமில்லை... யாரையும் சாராது, தன்னிச்சையாக எங்கேயும் சென்று திரும்புமளவு பழக்கப்படுத்தியதன் முதற்புள்ளி...
             அன்று தொடங்கி இன்று வரை, Avon cycle மட்டுமே Yamaha Alpha ஆகியிருக்கிறது... மற்றபடி அப்பா அப்பாவாகவே தான் இருக்கிறார்...


இரண்டாண்டுகளுக்கு முன்பான 
இதே போலொரு 
மார்ச் மாதத் துவக்கம் தான் 
வீட்டை மறந்ததொரு 
கோடையைக் கொணர்ந்தளித்தது... 
குடையை ஊடுறுவத் துணிந்த வெம்மையில் 
உலர்ந்த சருகுகளை 
நீ உருட்டியும் 
நான் மிதித்தும் 
சலசலத்து விளையாடிய 
மதியங்களை மறக்கமாட்டாய் தானே காற்றே....


இங்கிருந்து திரும்பிச் செல்கையில் 
என் கைத்தடம் பதிந்த 
கடைசிக் கையுறையும் 
அகற்றப்பட்டிருக்கும்... 
நான் மட்டும் 
ரேகைகளின் இடைவெளிகளில் 
இரப்பர் வாசத்தைச் சுமந்து செல்வேன்...