Lamb of Jesus, Father's girl, Chubby child, Researcher, Bookworm, Somewhat poet, Shutterbug, Bathroom singer...
Showing posts with label for the double ticks which never gonna turns blue. Show all posts
Showing posts with label for the double ticks which never gonna turns blue. Show all posts
Monday, 6 January 2020
"இவள் தந்தை
என்நோற்றான் கொல்"
எனும் சொல்லை அப்பாவுக்குப் பரிசளிக்கக் காத்திருப்பவள்.
Monday, 23 December 2019
மனம் பிசகியவளின் நினைவுச் சிதறல்கள்
அன்பும் நோயும் நேர்விகிதத் தொடர்புடைய மாயைகள். பிறரிடம் நாம் எதிர்பார்க்கும் அன்பினளவு உயரவுயர, அது கிடைக்காமல் போய்விடும் நிலையில் நம்மை ஆட்கொள்ளும் நோயினளவும் உயர்ந்துகொண்டே போகிறது. அதேபோல், நோயின் பிடியில் வயப்பட்டுக் கிடக்கும் தருணங்களில் அன்பிற்கான ஏக்கங்களும் அதிகரித்து விடுகின்றன.
கவனித்துக்கொள்ள ஆளற்ற அநாதித் தருணங்களில் மனம் உன்னையே நாடுகிறது. ஆளிருந்தும் கூட நீயற்ற நேரங்கள் அநாதி தானே.. இது போன்ற தருணங்களில் மனம் ஏங்கித் தவிப்பது உன்னிடமிருந்து வரும் ஒற்றை "இப்போ பரவால்லையா" என்ற விசாரிப்புக்காக மட்டுமே.. அதைப்பற்றிய நுண்ணளவு நினைவும் உன்னிடத்தில் இல்லையென்பதையும் மூளை அறிந்தே தான் வைத்திருக்கிறது. இருந்தும், அதை மனதிற்குணர்த்த முயன்று முயன்று நித்தமும் தோற்றுக்கொண்டே இருக்கிறது. என்றேனும் உன்னுடன் நிகழும் அலைபேசி உரையாடலைப் பதிந்து வைத்துக்கொண்டு தினந்தினம் கேட்டுக் கொள்ளுதலே உன்னருகாமையை நிழல்போல நானுணர்ந்து கொள்ள நானே ஏற்படுத்திக் கொண்ட ஒரே யுக்தி.
யாரேனும் உன்னைக் குறித்துப் பேசும் போதும், உன்னைப் பற்றி நான் யாரிடமேனும் பேசும் போதும், உன் குரலை எங்கேனும் கேட்கும் போதும், உன் பெயரை எங்கேனும் பார்த்துப் படிக்கும் போதும், அடி வயிறு குழைந்துபோகக் கண்கள் கண்ணீரால் திரையிட்டுக் கனநேரம் உனது பிம்பத்தைக் காட்சிப்படுத்திய பின்பு ஓய்ந்து இயல்பு திரும்பும் மூளையின் அனிச்சைச் செயல் ஒருபோதும் உமக்குப் புரியப்போவதில்லை. உன்னிடம் தினந்தினம் பேச வேண்டுமென்பதற்காகவே, ஏதேனுமொரு சந்தேகமோ, கேள்வியோ கேட்டுவிட்டு, பத்து நிமிடங்களுக்கொருமுறை கட்செவிக்குள் நுழைந்து, எப்பொழுது நீலநிறமாகுமென்று அந்த இரட்டைச் சரிகளையே பார்த்திருக்கும் என்னுடைய ஏக்கங்களை இரண்டு நாள் கழித்துத் திறந்து பார்த்துவிட்டுப் பதிலளிக்காமலே சென்றுவிடும் உன் கல் மனதிற்குப் புரிய வைப்பது கடினம் தான். என்னுடைய பதிவுகளுக்கு நீயளிக்க மறுத்த/மறந்த விருப்பக் குறிகளை மற்ற பெண்களின் பதிவுகளில் காணும்பொழுது அரூபமாகவொரு கத்தி என் நெஞ்சில் பாய்ந்துவிடும் வலியை உன்னால் உணரவே முடியாது.
நீயெனக்கில்லையென்று முழு முற்றாகப் புரிந்துபோன பின்னும் என் தியானங்களின் முதலிடத்தை உன்னைத் தவிற வேறெதுவாலும் பிடித்துக்கொள்ள முடியவில்லை. இரவுகளில் திரும்பிப் படுக்கும் போதுண்டாகும் மீச்சிறு விழிப்பிலும் உன்னை நினைக்கச் சொல்லி நிர்பந்திக்கும் இந்நினைவு மண்டல நரம்புகளைக் கட்டுப்படுத்தவும் இயலவில்லை; காலையெழுந்து கண் திறக்குமுன் உன்முகம் நினைவில் நிழலாடுவதை நிறுத்தவும் தெரியவில்லை.
"இவள் தந்தை
என்நோற்றான் கொல்"
எனும் சொல்லை அப்பாவுக்குப் பரிசளிக்கக் காத்திருப்பவள்.
Saturday, 24 August 2019
"நான் சொல்றேன்ல..."
தற்செயலாக நாம் சந்திக்கும் ஒரு நபர் நம்
வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடிய வல்லமையைப் பெற்று விடுகிறார். வாழ்க்கை முழுவதுக்கும்
அந்த ஒரே ஒரு நபர் மட்டும் தான் அப்படி அமைவாரா அல்லது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு
நபர் அமைவாரா என்பதெல்லாம் தெரியாது. ஆனாலும் அந்த நபர் நாம் கடந்து வந்த எல்லோரையும்
விட மிகவும் வித்தியாசமானவராகவோ அல்லது நம்முடைய சிந்தனைகளுக்கும் பண்புகளுக்கும் ஏற்றவராகவோ
அமைந்து விடுகிறார். அவரால் மட்டுமே நம் பைத்தியகாரத்தனங்களையும், நம் குறைபாடுகளையும், நம் மனநிலை மாற்றங்களையும் புரிந்துகொண்டு சமாளிக்க முடிகிறது. இன்னும் அதிகமாகச் சொல்லப்போனால் யாருக்குமே அடங்காத நம் திமிர்த்தன்மையும் அவரது ஒற்றைச் சொல்லின் முன்னால் அடங்கிப்போய்விடுமளவு ஆற்றல் வாய்ந்தது. ஆனாலும் அவரின் எந்தச் சொல் நம்மைக் கட்டுப்படுத்தும் என்று அவரே
உணராமல் தான் இருப்பார்.
நமக்கும் அவருக்கும் முரண்பாடே ஏற்படாது என்றெல்லாம் சொல்வதற்கில்லை.
மற்றவர்களைக் காட்டிலும் அவருடன் தான் நாம் அதிகம் சண்டை பிடிப்போம், சண்டைக்குப்பின்
யார் முதலில் பேசுவது என்ற ஈகோ பிரச்சனைகளெல்லாம் அவருடன் தான் அதிகமாகத் தலையெடுக்கும்.
பேசாத போதும் முறைத்துக்கொண்டே அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டால் போதுமென்று தோன்றும்.
நம்மைச் செம்மைப்படுத்தும் ஒரு சில நபர்களில் அவர் முதலிடத்தில் இருப்பார். நாம் சோர்ந்து
போகும்போது நீளுகின்ற முதல் கரம், எது வந்தாலும் நமக்காக நம்முடன் நிற்கும் முதல் நம்பிக்கை,
நாம் நடக்கத் துவங்கும்போது நீளுகின்ற பாதை. நாம் எதை வேண்டுமானாலும் சொல்லிப் பகிர்ந்துகொள்ளலாம்
என்றளவு பாதுகாப்பு உணர்வைத் தரும் மனிதர். என்றாலும், இருக்கும் வரையிலும் நம் மனதிற்கு
அவர் எவ்வளவு நெருக்கம் என்று நாம் உணர்வதே இல்லை.
அவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்ற
பிறகு அவரது நினைவுகளைப் பிரதிபலிக்கும் இடங்களையும் பொருட்களையும் நம்மால் மீண்டும்
எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாகச் செய்து விடுகிறது. முட்டிக்கொண்டு வரும் கண்ணீருடன்
அவர் விட்டுச் சென்ற இடங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்க்குமளவும் நம்மைப் பைத்தியமாக
அடித்து விடுகிறது. மொத்தத்தில் ஒருவித மன முதிர்வை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.
அதன் பிறகு உங்கள் ஈகோ எங்கே பறந்தோடிப்போனதென்று உங்களுக்கே தெரியாது. அவருக்காக எப்போதும்
எதையும் விட்டுக்கொடுக்கும் பக்குவம் வந்துவிடும். நாத்திகவாதிக்கும் கூடத் தீவிரமான
தெய்வ நம்பிக்கையை ஊட்டுமளவு தாக்கத்தைத் தந்துவிடும். நாம் எப்படி நடந்துகொண்டால்
அவருக்குப் பிடிக்குமோ அப்படி நம் பண்புகளும் குணங்களும் மாறத்துவங்கி விடும். அவருக்குப்
பிரியமான செயல்களைச் செய்வதே நமக்குப் பிரியமாக மாறிவிடும். எனிலும், அப்படிப்பட்ட
ஒருவரைச் சந்தித்துப் பிரியும்வரை, உங்களைத் தலைகீழாகக் கவிழ்த்துப்போடும் வல்லமை ஒரு
மனிதருக்கு உண்டென்று நான் சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள் தானே...
"இவள் தந்தை
என்நோற்றான் கொல்"
எனும் சொல்லை அப்பாவுக்குப் பரிசளிக்கக் காத்திருப்பவள்.
Subscribe to:
Posts (Atom)


