பிரியமுள்ள பிதாவே,
இந்தப் பாவியின் மனதைப் பஞ்சு போல் மென்மையாய்ப் படைத்தவர் நீர் தானே... பிறகெதற்குத் தொடர்ந்து வலிகளால் தொய்யப் பண்ணுகிறீர்.? நீர் தான் பார்வோனிதயத்தைப் பலமுறை கடினப்படுத்தியவர் ஆயிற்றே, இந்தச் சிறு பெண்ணின் இதயத்தைக் கடினப்படுத்துவதில் என்ன தயக்கமுமக்கு.? தன்னை நேசிப்பதைப் போல பிறரையும் நேசியென்றீரே, பிறர் நேசத்தை எதிர் பாராத கடின இதயத்தைத் தர மறந்தீரே..
கொடுப்பவராக இருக்க வேண்டும் தான். உலகத்தாரனைவரும் கொடுத்துக்கொண்டே இருந்தால், கொள்பவர் யார்.? கொடுத்தலும் கொள்ளுதலும் தானே சமநிலைக் காரணிகள். எல்லோர் போலேயும் கொடுத்தலும் கொள்ளுதலுமான நியதியுடன் தானே என்னையும் படைத்தீர். ஆனால், கொள்ளுதல் உமக்கில்லை, காலம் முழுவதும் கொடுத்துக் கொண்டே இருவென்று நீரென்னைச் சபித்தாற்போல் தோன்றுகிறது. தராசின் ஒரு பக்கத் தட்டில் மட்டும் எடை கூடிக்கொண்டே போனால், அது பாதாளபரியந்தம் அமிழ்ந்து புதைந்து போகக் கூடுமே.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVo8WltZWP0EfH3ffgKkP0b81RVKEpdX00z1qKZDsnLGMGEIr8WOxFG48RMovek9QN2M-etVgbHbsgZKcz1KJjrJZQbiTHFkPJSPdXFknJqxKO54vBpRmk5AOkGeFN5rIrxmDv-mTRcG1a/s200/images.jpg)
கனி கொடுத்துக் கொண்டேயிருக்கச் சித்தமாயிருக்கும் மரமொன்றிற்கு நீர்வார்ப்பது யார்.? பதிலுக்கு நீர் வார்ப்பவரல்லாமல் மரம் பட்டுப்போகுமே. நீரூற்றுவாரில்லாமல் மழைக்காகக் காத்திருக்கும் மரம்போல உமதன்பிற்காகக் காத்திருக்கிறேன் என் நேசரே. என் பிரியமானவரே எனக்குத் தேற்றுதல் தாருங்கள்..