Powered By Blogger

Friday, 14 June 2019

ஓரறிவைக் கொலை செய்பவள்
*********************

யானைக்குட்டி என்றழைத்தார்கள்
முன்னால்விட்டுப் பின்னால் சிரித்தார்கள்


புன்னகையுடன் கடந்தவளைக்
கொஞ்சம் பூசினாற்போல் இருக்கிறாய்
அவ்வளவு தானென்று ஆறுதலுரைத்தார்கள்


வயது இருபதைக் கடக்கையில்
தந்தை தவிர்த்து
எல்லோரும் ஏசினார்கள்

சொற்பமாகவே உண்ணுமவளைத்
தீனிப் பண்டாரமென்று வசைந்தார்கள்

உண்ணாமலே கிடந்து நடுங்கத் துவங்குகையில்
அவள் அப்பத்தா உடம்பு
அவள் என்ன செய்வாள் பாவமென்று
தேற்ற முனைந்தார்கள்

பேருந்துப் பயணங்களில்
தனித்த ஒற்றையிருக்கையைத்
தேடினால் அது அவளே தான்

யாமங்களின் அணைப்பில்
அன்பைத் தேடியபடி
தேம்பியழுது துயிலுமவள்
கனவுகளில் ஆடுமேய்க்கும் தருணங்களில்
அப்பத்தா நினைப்பில்
செடிகளையும் புற்களையும்
வெட்டிச் சாய்த்துக்
கொலை செய்து கொண்டிருக்கிறாள்

இரவுக் கண்ணீரோடு
குருதிக் கறைகளைக் கழுவியபடி
மீண்டும் மீள்கின்றன
கொலைகாரியாக்கும்
அடுத்தடுத்த நாட்கள்...

No comments:

Post a Comment