Powered By Blogger

Monday, 7 November 2016

தமுஎகச , கோவைக்கிளையில் ஆன்மன் அண்ணாவின் லெமூரியக் கண்டத்து மீன்கள் பற்றிய அறிமுகவுரையின் பதிவு:
__________________________________________
       
             தற்போது உள்ள காலகட்டத்தில் புத்தக வாசிப்பு என்பது அறவே குறைந்து விட்டது. நாம் படிக்கத் துவங்கும் புத்தகம் முதல் ஐந்தாறு பக்கங்களில் நம்மைக் கவர்ந்திழுக்க வேண்டும். அப்போது தான் மேற்கொண்டு நாம் அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படிக்கத் துவங்குவோம். முதல் ஐந்தாறு பக்கங்களில் நம் மனதைக் கவரும் விஷயம் இல்லையெனில் மடித்து அலமாரியில் வைத்து விட்டுச் சென்றுவிடுேவாம். ஆன்மன் அண்ணாவின் இந்தப் புத்தகத்தில் ஒரு கவிதை, லெமூரியக் கண்டத்தின் கரையில் கால் நனைத்துக் கொண்டிருந்த என்னைச் சுழற்றி அடித்துக் கொண்டுபோய் ஆழ்கடலில் மூழ்க்கி முத்தெடுக்க வைத்தது. "விடுதலை" என்னும் தலைப்பில்,
                "கூண்டைத் திறந்து விடு
                  தூர எறிகிறேன்
                  தூக்கிச் செல்
                  நீ அணிவித்த மகுடத்தை .."
         என்று விடுதலையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கவிதை. சுதந்திரமற்ற மனிதனின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும் கவிதை. சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை ஈழத் தமிழரை உவமைப்படுத்தி எழுதியுள்ள கவிதையும் "லெமூரியக் கண்டத்து மீன்கள்" என்ற தலைப்பின் கீழ் உள்ளது.
              ஈழம் என்றவுடன் நினைவுக்கு வந்து செல்லும் கொடூரம் ஈழத்தமிழர் படுகொலை.
வைகோ தொடங்கி எல்லாக் கவிஞர்களும் ஈழம் குறித்து எழுதியுள்ளனர். ஆன்மன் அண்ணா,"செஞ்சோலை" எனும் தலைப்பில்,
                "எந்திரப் பறவை
                   உமிழ்ந்த நச்சில்
                   தகர்ந்த
                   பனைமரத்தில்
                   குடியிழந்த கிளிகள்
                   தாழப் பறந்து
                   இறங்கித் தேடின -
                   தம் குஞ்சுகளைப்
                   பதுங்கு குழிகளில்..."
            என்று ஈழப் போரின் கொடூரத்தைக் கண் முன் காட்சியாக விரிக்கிறார். பதுங்கு குழிகளில் ஒளிந்து கொண்டிருந்த கிளிக் குஞ்சுகளைக் கோழிக் குஞ்சுகளாக மாற்றி அடுத்த கவிதைக்கு அழைத்துச் செல்கிறார். இங்கு எந்திரப் பறவையைக் கூடப் பருந்தாக மாற்றியிருக்கிறார். பருந்து மேலே பறந்து கொண்டிருக்கிறது, அதன் நிழல் நிலத்தில் விழுகின்றது. இந்தக் கோழிக் குஞ்சுகள் பருந்தின் நிழலைத் துரத்திக் கொண்டோடிக் கொத்துவதாக அமைத்திருக்கின்றார். குழந்தைப் பருவத்திலேயே யுத்தத்தின் கொடூரம் எந்த அளவிற்குப் பழிவாங்கும் குணத்தையும் வன்மத்தையும் விதைக்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார்.
             கவிஞர்கள் என்றாலே இயற்கையின் மீது சற்று அதிகமாக அக்கறை கொள்பவர்கள் தான். ஆன்மன் மட்டும் விதிவிலக்கா என்ன.. நாற்கரச் சாலையின் அடியில் புதைந்து கிடக்கும் சிறு விதை கூட எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் முளைத்து வருவதற்கான ஆற்றலோடு தான் இருக்கும் என்பதைப் பதிய வைத்திருக்கிறார்.
                இயற்கையை அழித்து விட்டு நகரமயமாதல் என்கின்ற பெயரில் அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டி விட்டோம். பக்கத்து வீட்டிலும் எதிர் வீட்டிலும் யார் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் வீட்டைப் பூட்டி விட்டு உள்ளேயே அடைந்து கிடக்கிறோம். மழையை இரசிக்காத மனிதர்கள் கிடையாது, மழை பற்றி எழுதாதவன் கவிஞனே கிடையாது.பெருமழை வந்து போனதைக் கூட அறியாத அளவிற்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் "பெருமழையும் பூனைப்பாதமும்" என்ற கவிதையில் சாதாரணமான சொல்லாடலில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆன்மன்.
                எல்லா விதமான சமூகப் பிரச்சினைகள் குறித்தும் பேசியிருக்கிறார். அணுக்கழிவு முதல் அரசியல்கழிவு வரை அத்தனையையும் எழுதியிருக்கிறார். துளித் துளியாக இருக்கும் நாம் எப்பொழுது ஒன்றுகூடிப் பெருவெள்ளமாக மாறி இந்தக் கழிவுகளை எல்லாம் அடித்துச் சென்று சுத்தம் செய்யப் போகிறோம் என்று கொந்தளித்திருக்கிறார்.
                  இந்தியா இப்பொழுது பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிமைப்பட்டுத் தான் கிடக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. நாடகத்தின் வாயிலாக ஒரு மணி நேரம் நடித்துப் புரிய வைத்த பன்னாட்டு முதலாளித்துவம் குறித்து ஐந்தாறே வரிகளில் எழுதிப் புரிய வைத்துவிட்டார்."யுத்தம்" என்ற தலைப்பில் அமைந்த அக்கவிதை இதோ,
              "கத்தியின்றி இரத்தமின்றி
                யுத்தஞ் செய்றான்
                கார்ப்பரேட்டு..
                அட கம்முனு கெட
                கத்துனா
                நீ நக்சலைட்டு.."
              இதனை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்டுவிட்டால் "நக்சலைட்டு" என்று குற்றம்சாட்டப்பட்டுச்
சிறையில் அடைப்பார். கேட்க வேண்டிய அரசியல்வாதிகளும் சுயநலம் கருதி விட்டுவிடுகின்றனர்.
                மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல மக்களின் மனங்கள் மாறி விட்டன. மனிதத் தன்மை அழிந்தே விட்டது என்பதைச் "சுவர்" எனும் தலைப்பின் கீழ் தருகிறார்.
                 "எல்லோருக்கும்
                   இடையில்
                   சுவர் எழுப்புவதில்
                   கைதேர்ந்தவன் நீ..
                   இப்பொழுது
                   உன்னைச் சுற்றிலும்
                   நீ எழுப்பிய சுவர்கள்.."
               உலகம் முழுவதிலும் பாவங்கள் பெருகிவிட்டன. "பாவ மன்னிப்பு" என்ற கவிதையில் பாவங்கள் பெருகிவிட்ட கதையைச் சொல்கிறார். மனிதர்கள் அனைவரும் தேவாலயத்திற்குச் செல்கிறார்கள். தேவன் முன் மண்டியிட்டுத் தங்கள் பாவங்களை முனுமுனுக்கத் தொடங்குகிறார். கொஞ்ச நேரத்தில் தேவன் சிலுவையிலிருந்து இறங்கி வந்து மனிதர்கள் முன் மண்டியிட்டு "இத்தனை பாவங்களை என்னால் மன்னிக்க இயலாது" என்று கூறுவதாக அக்கவிதை அமைந்துள்ளது. இறைவனால் கூட மன்னிக்க முடியாத அளவிற்குப் பாவங்கள் பெருகிவிட்டது என்பதைச் சிரிப்பினூடே சிந்திக்கவும் வைத்திருக்கார்.
               தனிப்பட்ட முறையில் இந்தத் தொகுப்பில் எனக்கு இரண்டு கவிதைகள் மிகவும் பிடித்திருந்தது. ஒன்று துவக்கத்தில் கூறிய "விடுதலை" என்னும் கவிதை. மற்றொன்று "தனிமை" எனும் தலைப்பில் அமைந்த கவிதை...
               "அபத்தமாய் இருக்கிறது
                 தனிமையைத்
                 தனிமையெனச் சொல்வது.."
              தனிமை என்பது உணர்ச்சியல்ல, அது ஒரு உணர்வு. உணர்ச்சியை விளக்கிக் கூறிட முடியும். உணர்வுகளை விளக்க இயலாது. தனிமையின் வலி அதனை அனுபவித்தவர்களுக்கும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மட்டுமே உணரக் கூடியது. ஆன்மன் அண்ணா எழுத்தின் மூலமே அதனை உணர்ந்தியிருக்கிறார்.
                இத்தனை சிறப்பாக அமைந்துள்ள இந்தத் தொகுப்பில் ஒரே ஒரு குறை மட்டுமே எனக்கு. "வேண்டுதல்" என்னும் தலைப்பில்,
                 "ஒளிவீசும்
                    தூரத்து விண்மீன்
                    கனவெல்லாம்
                    எனக்கில்லை..
                    வரவேற்பறையின்
                    வண்ணமீன்
                    தொட்டியிலொரு
                    இடம்கொடு
                    துள்ளித்
                    திரிந்து விட்டுப்
                    போகிறேன்.."
              என்று எழுதியிருக்கிறார். பொதுவாகவே "பெரிதினும் பெரிது கேள்" என்று சொல்லுவார்கள். லெமூரியக் கண்டத்து மீனான ஆன்மன் அண்ணா வண்ண மீன் தொட்டிக்குள் தன்னை ஏன் சுருக்கிக் கொள்ள நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தும் அவர் எதிர்மறையாக எதுவும் நினைக்க மாட்டாரே என்று யோசித்த போது தான் ஒரு கருத்து புலப்பட்டது. எல்லா இடங்களிலும் பெரிதாகக் கேட்க முடியாது இல்லையா, கேட்கவும் கூடாது, அது தவறாகிவிடும்.
               சட்டை தைப்பதற்கு ஊசி தான் உதவும். பெரிதினும் பெரிது வேண்டும் என்று கேட்டால் கடப்பாரை தான் கிடைக்கும். கடப்பாரையை வைத்துச் சட்டை தைக்க முடியாது அல்லவா.. ஒரு சில இடங்களில் சிறியதாகக் கேட்பதே சிறப்பு என்பது புரிந்தது.
                அதனால், அந்தக் குறையும் நிறையாக மாறிவிட்டது. இந்தத் தொகுப்பை ஒரு கரையில் தொடங்கி மறுகரையில் முடிப்பதற்குள் இடையில் இருக்கக் கூடிய பக்கங்களில் எல்லா விதமான கவிதைகளையும் நீங்கள் காண முடியும். மொத்தத்தில் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் ..
         வாழ்த்துக்கள் ஆன்மன் அண்ணா...

No comments:

Post a Comment