Powered By Blogger

Sunday, 18 July 2021


இருளுக்குப் பார்வையைப்
பழகக் கொடுத்த பிறகு
உன் அன்பின் துளிச் சிதறல் கூடக்
கண்கள் கூசுகிறது..

இரண்டாவது முறையாக
மூன்றாவது முறையாக
நாங்காவது முறையாக என்று
இருளுக்குப் பழகுதல் எளிதானதே..

இருப்பினும்,
இடையிடையேயான ஒளிச்சுவடுகள்
தேவையில்லை எனக்கு...
தொலைவாகியே போய்விடு...

Sunday, 18 April 2021


(1)   
             மனவோட்டத்தின் தடங்களைத் துல்லியமாகக் குறிப்பறிவிக்க வேண்டுமானால் ஒலிக்குறிப்பு துணையாகவிருக்கலாம். ஆனால், எண்ணத்தின் நுண்ணிய இழைகளை முழுமையாக எடுத்தியம்பத் துணைநிற்பது வரிவடிவமே என்பது அவளின் நம்பிக்கை.
        உணர்ச்சிகள் உள்ளுக்குள் திரண்டு கண்களில் கனத்துக் கீழிறங்கும் தருணங்களில் தொண்டையடைத்து உரையாடல் அறுபடும் வேதனை வேளைகளை எழுத்துகள் ஒருபோதும் உருவாக்கி விடாது. தத்தித் ததும்பியரும்பும் உணர்வுகளைக் கொட்டிக்குவிக்கும் ஒலிக்குறிப்புகளை அவள் ஒருபோதும் விரும்பியதே இல்லை. கவனம் குவித்தெடுத்துக் கோர்த்துத் திருப்பியளிக்கும் பக்குவம் எழுத்திற்கு மட்டுமே உண்டு.
        தன்னுள்ளத்து உணர்வுகளை எதிரிலிருப்பவர்க்கு வெளிப்படுத்துதல் அவளது நோக்கமல்ல. தன்னுள் துளிர்த்ததை எதிரிலிருப்பவருள்ளும் துளிர்க்க வைத்துத் தானுணர்ந்ததை அவரும் உணர்ந்து தன்னையும் உணர்த்துவதற்கு அவளது வலிமிகு ஆயுதமாக எழுத்தை மட்டுமே முழுமுற்றாக நம்புகிறாள்.
      எழுத்தின் மதிப்பை அறுந்தவனுக்குத் தான் புத்தகத்தின் முனை மழுங்காமல் பக்கங்களைப் புரட்டத் தெரியும். மிகையுணர்திறனை இயல்பாகக் கொண்ட அவளுக்குப் பேச்சை விட எழுத்தில் தான் போராடி வெளிப்படத் தெரியும். அதனால் தான் அவள் பேச்சுக்கலையைப் புறந்தள்ளிவிட்டுக் கவிதையைக் கைக்கொண்டாள்.
                    தன்னெழுத்தின் வழியே தன் குரலை, தொனியை, செய்தியை, மனநிலையைச் சரியாகக் கணிக்கத் தெரிந்த எதிராளியே அவளின் தேவை. ஓவியம் பார்த்து ஓசையைக் கண்டறியும் பக்குவம் நிறைந்து மொழியையே சுவாசமாகக் கொண்டு தமிழ் வழியே காதலை வெளிப்படுத்தும் ஒருவரால் மட்டுமே அவளுக்கு மிகச் சரியான எதிராளியாக இருக்கவியலும்.

Saturday, 23 January 2021


மாண்புமிகு காதல் கடிதங்கள்

 
கப்பல் செய்தோம்
கசக்கி எறிந்தோம்

பின்னால் திருப்பிப்
பால் கணக்கு எழுதினோம்

பொட்டலம் மடித்துப்
பொரிகடலை தின்றோம்

எட்டாக மடித்து
எங்கோ எறிந்ததை
அள்ளியெடுத்து வந்து
பேரீச்சம் பழக்காரரிடம்
எடைக்குப் போட்டோம்

அதே பிரதியொன்றை 
ஏற்கெனவே எடைக்குப் போட்டிருந்த
எதிர்வீட்டுப் பெண்களிடம்
உணர்ச்சியற்ற பார்வைகளைப்
பரிமாறிக் கடந்தோம்

வேறென்ன செய்யச் சொல்கிறீர்கள்
உங்களது
மாண்புமிகு காதல் கடிதங்களை...


குங்குமம் இதழிலிருந்து...


 

 

யாழ் சிற்றிதழில்...





இடைநிறுத்திய கிறுக்கலைத்
தொடரும்படி வசீகரித்த
இவ்வூண் துளைத்து என்பு தழுவும்
பனிமுகில் வைகறை..


கனவுலகிற்கிணையாகக்
காட்சிப்பட்டுக் கிடக்கும்
உறைகுளிரைக் கரைக்கும்
தழலை இறைத்தவாறு
அணைத்த நிலையில் மட்டும்
கடந்து விடாதீர்கள் காதலர்களே..
நான் எனக்கான கங்கு தேடிக்
கண்டடையும் வரையிலும்
...

Tuesday, 3 November 2020

இருள் குளிர்வது
தலையணைகளை நனைத்தும் தீராத
கண்ணீரின் மிச்சமென்கிறேன் நான்..
ஏதேதோ அறிவியல் காரணங்களை
அடுக்குகிறாய் நீ..

பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும்
வயிற்றுக்குள் பிறக்கின்றன
சிறகசைத்துப் படபடக்கும்போது
குறுகுறுப்பை உணரலாம்

மெல்ல மேலேறி
வாய்மொழியில் வெளிப்பட்டுவிடின்
பூக்களையோ கொலைக்கரங்களையோ
சென்றடையலாம்

இவற்றுள் பெரும்பாகம்
பூக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல்
தனித்திருந்தே சாகின்றன
அவை கொலைக்கரங்களில்
அகப்பட்டு விடுவதையும் விரும்புவதில்லை..

Thursday, 5 March 2020

Dear Jesus,


You made me strong...
Strong enough,
To be alone;
To be courageous;
To let it go;
To accept the change;
To survive after disasters;
To be love and care me;
To laugh at the hard times;
To be cool at the desert;
To be an answer for a few...

You forgave me,
When I scold you;
When I angry on you;
After all, I'm your child...

You teach me,
To trust you;
To follow you;
To depending only on you;
To care about everyone;
To smile at everyone and everything;
To forgive anyone...

And I felt your progress;
I realize you by my side;
I can feel the force of you to pulling into you...

I think,
You are trying
To turn my heart like your own
As like you raised us 
With your own image...

I'm believing in you that
You will surely make me shine...

Because
After all, I'm your favorite child
The favorite child as like everyone 
I'm happy about that,
Me too deserve you;
Me too deserved to be your's...

Wednesday, 12 February 2020


என்னைக் கூண்டிலடைக்கும் வலிமை 
உங்களுக்கு இருக்கலாம்.
பறந்துவிட வேண்டுமென்று 
நான் மனது வைத்தால்,
என்னோடு சேர்த்து 
உங்கள் கூண்டையும் இழந்து விடுவீர்கள்..

you may have the strength to catch me into a cage. 
but, 
If I wish to fly, 
Definitely you will lose me; 
And your cage too...