(1)
மனவோட்டத்தின் தடங்களைத் துல்லியமாகக் குறிப்பறிவிக்க வேண்டுமானால் ஒலிக்குறிப்பு துணையாகவிருக்கலாம். ஆனால், எண்ணத்தின் நுண்ணிய இழைகளை முழுமையாக எடுத்தியம்பத் துணைநிற்பது வரிவடிவமே என்பது அவளின் நம்பிக்கை.
உணர்ச்சிகள் உள்ளுக்குள் திரண்டு கண்களில் கனத்துக் கீழிறங்கும் தருணங்களில் தொண்டையடைத்து உரையாடல் அறுபடும் வேதனை வேளைகளை எழுத்துகள் ஒருபோதும் உருவாக்கி விடாது. தத்தித் ததும்பியரும்பும் உணர்வுகளைக் கொட்டிக்குவிக்கும் ஒலிக்குறிப்புகளை அவள் ஒருபோதும் விரும்பியதே இல்லை. கவனம் குவித்தெடுத்துக் கோர்த்துத் திருப்பியளிக்கும் பக்குவம் எழுத்திற்கு மட்டுமே உண்டு.
தன்னுள்ளத்து உணர்வுகளை எதிரிலிருப்பவர்க்கு வெளிப்படுத்துதல் அவளது நோக்கமல்ல. தன்னுள் துளிர்த்ததை எதிரிலிருப்பவருள்ளும் துளிர்க்க வைத்துத் தானுணர்ந்ததை அவரும் உணர்ந்து தன்னையும் உணர்த்துவதற்கு அவளது வலிமிகு ஆயுதமாக எழுத்தை மட்டுமே முழுமுற்றாக நம்புகிறாள்.
எழுத்தின் மதிப்பை அறுந்தவனுக்குத் தான் புத்தகத்தின் முனை மழுங்காமல் பக்கங்களைப் புரட்டத் தெரியும். மிகையுணர்திறனை இயல்பாகக் கொண்ட அவளுக்குப் பேச்சை விட எழுத்தில் தான் போராடி வெளிப்படத் தெரியும். அதனால் தான் அவள் பேச்சுக்கலையைப் புறந்தள்ளிவிட்டுக் கவிதையைக் கைக்கொண்டாள்.
தன்னெழுத்தின் வழியே தன் குரலை, தொனியை, செய்தியை, மனநிலையைச் சரியாகக் கணிக்கத் தெரிந்த எதிராளியே அவளின் தேவை. ஓவியம் பார்த்து ஓசையைக் கண்டறியும் பக்குவம் நிறைந்து மொழியையே சுவாசமாகக் கொண்டு தமிழ் வழியே காதலை வெளிப்படுத்தும் ஒருவரால் மட்டுமே அவளுக்கு மிகச் சரியான எதிராளியாக இருக்கவியலும்.
No comments:
Post a Comment