மனம் பிசகியவளின் நினைவுச் சிதறல்கள்
அன்பும் நோயும் நேர்விகிதத் தொடர்புடைய மாயைகள். பிறரிடம் நாம் எதிர்பார்க்கும் அன்பினளவு உயரவுயர, அது கிடைக்காமல் போய்விடும் நிலையில் நம்மை ஆட்கொள்ளும் நோயினளவும் உயர்ந்துகொண்டே போகிறது. அதேபோல், நோயின் பிடியில் வயப்பட்டுக் கிடக்கும் தருணங்களில் அன்பிற்கான ஏக்கங்களும் அதிகரித்து விடுகின்றன.
கவனித்துக்கொள்ள ஆளற்ற அநாதித் தருணங்களில் மனம் உன்னையே நாடுகிறது. ஆளிருந்தும் கூட நீயற்ற நேரங்கள் அநாதி தானே.. இது போன்ற தருணங்களில் மனம் ஏங்கித் தவிப்பது உன்னிடமிருந்து வரும் ஒற்றை "இப்போ பரவால்லையா" என்ற விசாரிப்புக்காக மட்டுமே.. அதைப்பற்றிய நுண்ணளவு நினைவும் உன்னிடத்தில் இல்லையென்பதையும் மூளை அறிந்தே தான் வைத்திருக்கிறது. இருந்தும், அதை மனதிற்குணர்த்த முயன்று முயன்று நித்தமும் தோற்றுக்கொண்டே இருக்கிறது. என்றேனும் உன்னுடன் நிகழும் அலைபேசி உரையாடலைப் பதிந்து வைத்துக்கொண்டு தினந்தினம் கேட்டுக் கொள்ளுதலே உன்னருகாமையை நிழல்போல நானுணர்ந்து கொள்ள நானே ஏற்படுத்திக் கொண்ட ஒரே யுக்தி.
யாரேனும் உன்னைக் குறித்துப் பேசும் போதும், உன்னைப் பற்றி நான் யாரிடமேனும் பேசும் போதும், உன் குரலை எங்கேனும் கேட்கும் போதும், உன் பெயரை எங்கேனும் பார்த்துப் படிக்கும் போதும், அடி வயிறு குழைந்துபோகக் கண்கள் கண்ணீரால் திரையிட்டுக் கனநேரம் உனது பிம்பத்தைக் காட்சிப்படுத்திய பின்பு ஓய்ந்து இயல்பு திரும்பும் மூளையின் அனிச்சைச் செயல் ஒருபோதும் உமக்குப் புரியப்போவதில்லை. உன்னிடம் தினந்தினம் பேச வேண்டுமென்பதற்காகவே, ஏதேனுமொரு சந்தேகமோ, கேள்வியோ கேட்டுவிட்டு, பத்து நிமிடங்களுக்கொருமுறை கட்செவிக்குள் நுழைந்து, எப்பொழுது நீலநிறமாகுமென்று அந்த இரட்டைச் சரிகளையே பார்த்திருக்கும் என்னுடைய ஏக்கங்களை இரண்டு நாள் கழித்துத் திறந்து பார்த்துவிட்டுப் பதிலளிக்காமலே சென்றுவிடும் உன் கல் மனதிற்குப் புரிய வைப்பது கடினம் தான். என்னுடைய பதிவுகளுக்கு நீயளிக்க மறுத்த/மறந்த விருப்பக் குறிகளை மற்ற பெண்களின் பதிவுகளில் காணும்பொழுது அரூபமாகவொரு கத்தி என் நெஞ்சில் பாய்ந்துவிடும் வலியை உன்னால் உணரவே முடியாது.
நீயெனக்கில்லையென்று முழு முற்றாகப் புரிந்துபோன பின்னும் என் தியானங்களின் முதலிடத்தை உன்னைத் தவிற வேறெதுவாலும் பிடித்துக்கொள்ள முடியவில்லை. இரவுகளில் திரும்பிப் படுக்கும் போதுண்டாகும் மீச்சிறு விழிப்பிலும் உன்னை நினைக்கச் சொல்லி நிர்பந்திக்கும் இந்நினைவு மண்டல நரம்புகளைக் கட்டுப்படுத்தவும் இயலவில்லை; காலையெழுந்து கண் திறக்குமுன் உன்முகம் நினைவில் நிழலாடுவதை நிறுத்தவும் தெரியவில்லை.
No comments:
Post a Comment