Powered By Blogger

Saturday, 28 September 2019

மேய்ப்பருக்குப் பிரியமான ஆட்டுக்குட்டி

உங்கள் பிறப்புக் காலத்தை 
அறிவித்த நட்சத்திரத்தை 
அவள் அறிந்தாளில்லை
உங்களுக்கேயான பண்டிகைகளெதுவும் 
உரிய காலங்களில் ஆசரித்தவளில்லை

உங்கள் மறுதலிப்பை 
அவள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை 
அவள் எந்தத் துயரத்தின் கைகளிலும் 
தன்னை ஒப்புக்கொடுக்கச் 
சித்தமாய் இருக்கிறாள் 
நீங்கள் மட்டும் அவளது கைகளில் 
முத்தம் செய்துவிடுங்கள் 
ஒருமுறையேனும் 
ஒரே ஒருமுறையேனும்

குறைந்தபட்சம் உங்கள் அங்கியையேனும் 
தொட்டு விடுவதற்காய்த் 
தவித்துக்கொண்டிருக்கும் அவளை 
இன்னும் நீங்கள் உணரவேயில்லையோ

நீங்கள் உண்ணும்போது 
தவறி விழும் 
அப்பத்தின் துணிக்கைக்காகவும் 
நீங்கள் அருந்தும்போது சிந்தும் 
ஒருதுளி திராட்சரசத்திற்காகவும் 
அவள் காத்துக் கிடக்கிறாள்

நீங்கள் தேட வேண்டுமென்பதற்காகவே 
மந்தையிலிருந்து பிரிந்து வந்துவிட்ட 
ஒற்றை ஆட்டுக்குட்டி 
அது அவள் தான்
அதுவும் அவளே தான்

உங்களுக்குப் பிரியமானவளாக 
இருக்க விரும்பும் அவளை 
அவள் விருப்பத்தின்படியே 
எப்படியாகிலும்
கண்டுபிடித்து விடுவீர்கள் தானே...???

No comments:

Post a Comment