பேக்-கின் கதை
ஊரெல்லாம் சுற்றி அலைந்து திரிந்து ஒரு வழியாக காலேஜ் பேக் வாங்கியாகிவிட்டது. வாழ்க்கையிலேயே இது நான்காவது முறை. முதல் முறை நான்காவது படிக்கும்போது வாங்கியது.
எங்கள் பங்காளியின் மகளொருத்தி எனது வகுப்பில் தான் படித்தாள். அவள் தான் முதல் முதலில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி வளாகத்தில் ஸ்கூல்-பேக் வாங்கிக்கொண்டு வந்தவள். அதுவும் மூன்றாம் வகுப்பில் இரண்டாவது மிட்-டேர்ம் டெஸ்ட்க்குப் பிறகு தான். யாரோ அவளுடைய சொந்தக்கார மாமா வாங்கீட்டு வந்து தந்தாங்களாம். ரொம்ப பிலுக்கு தான். விட்டு விடுவோமா நாம்.
உடனடி நடவடிக்கையாக வீட்டில் கேட்டு அப்பாவைச் சம்மதிக்க வைத்தோம். அவரும் வாரச் சந்தைக்குப் போய் நரம்பு வலப்பையை வாங்கிக்கொண்டு வந்து "இதுவும் பேக் தான் பள்ளிக்கூடம் கொண்டு போங்க"ன்னு முறைச்சார்.
வேறு வழியில்லாமல் அதைத் தூக்கிக்கொண்டு போனோம். நரம்புப் பையின் இரு காதுகளையும் இரண்டு தோள்களில் மாட்டிக் கொண்டு போனதில் மேலே துருத்திக்கொண்டு இருந்த புத்தம்புது மர ஸ்கேல் களவு போய்விட்டது. அழுது புரண்டு மறுபடியும் இரண்டாவது முறையாக வீட்டில் பஞ்சாயத்து கூட்டப்பட்டபோது எங்கள் சார்பில் மறுபடியும் ஸ்கூல்- பேக் வாங்கும் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
போன முறை நிராகரிக்கப்பட்ட மனு இந்த முறை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அம்மாவே வேலை மெனக்கெட்டு டவுனுக்குப் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் தான்.
எனக்கு ஒன்று, என் தம்பிக்கு ஒன்று. அந்தப் பேய்க்கும் வங்கியாக வேண்டுமே. எங்கள் பள்ளியில் நான் இரண்டாவது பாஸாகி மூன்றாவது போகும்போது அவனையும் கொண்டுவந்து முதல் வகுப்பில் சேர்த்தார்கள். திடீர் திடீரென்று அருகில் வந்து கையைச் சுரண்டி "பென்சில் காணோம் டீ, உன்னோடதைக் குடு"ன்னு கேட்பான். நாமும் பாவம் பார்த்து தந்து விடுவோம். வீட்டுக்குப் போனதும் பென்சில் வேணும்னு அப்பாவிடம் கேட்டால் "எத்தனை வாங்கிக்குடுத்தாலும் தொலைச்சிட்டு வந்து நில்லு"னு எனக்கு அடி விழும்.
இரண்டு பேக் வாங்கிக்கொண்டு வந்த விஷயம் கேள்விப்பட்டவுடன் பகீர் என்றது. எப்போதும் போல எங்கேயோ தொலைத்துவிட்டு வந்து மீண்டும் கையைச் சுரண்டி தோல் உரிய வைத்துவிடுவானோ என்று தான் பயமெல்லாம். நல்ல வேலை, ஒரேமாதிரியான பேக்; வேறு வேறு நிறம். "வேறு வேறு நிறம்". அப்பாடா அப்போது தான் உயிரே வந்தது. கருப்பு நிறம் எனக்கும் சிமெண்ட்டு நிறம் அவனுக்குமாகப் பங்கு பிரித்துக்கொண்டோம்.
ராந்தல் வெளிச்சத்தில் நிதானம் போதாமல் கன்னாபின்னாவென்று இழுத்து முதல்நாளே ஒரு ஜிப்பை மலையேற்றிவிட்டான் பாவிப்பயல். அந்த ஜிப்புக்கு மட்டும் பின்னூக்கைக் குத்தி எடுத்துக்கொண்டு வந்தான். நான் ஐந்தாவது முடித்த பின்னும் நன்றாகத்தான் வைத்திருந்தேன். தம்பி சார் தான் உரித்துத் தொங்கவைத்து விட்டார். பிறகென்ன, நினைத்தபடியே என்னுடையதை வாங்கித் திரும்பவும் அவனுக்கே உபயமளித்து விட்டார்கள்.
ஆறாம் வகுப்பிற்குப் பெரிய பள்ளிக்கூடம் சேர்ந்த பிறகு பழையபடி ஒயர்கூடை தான். பக்கத்துத் தோட்டத்துக்காரி மெட்ரிக் பள்ளி போய்க்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு புது பேக் கிடைக்கும். நான் எட்டாவது போகும்போது அவளது பழையதுகளில் நல்ல நிலையிலிருந்த ஒரு பேக்-கை எனக்குத் தந்தார்கள். இரண்டே வாரத்தில் தம்பி சார் பெரிய பள்ளிக்கூடம் சேர்ந்த பிறகு அதுவும் அவனிடமே ஒப்படைக்கப்பட்டது. நல்லவேளை அப்பா செய்த ஒரே புண்ணியம், அவனையும் என்னையும் வேறு வேறு பள்ளியில் சேர்த்தது தான்.
நான் ஒன்பதாவதுக்கும் அவன் ஏழாவதுக்கும் மாறும்போது அவன் அப்பாவுடைய கம்பி வைத்த சைக்கிளை ஓட்டிப்பழகி விட்டதால், சின்ன அத்தை வீட்டிலிருந்து மே-மாத லீவு முடிந்து வரும்போது நாங்கள் சைக்கிள் பழகுவதற்காகவே பிரித்துப்போட்டு மூட்டை கட்டிக்கொண்டு வந்து பூட்டிக்கொடுத்த சின்ன சைக்கிள் மீண்டும் எனக்கே வந்தது. இந்த ஒரே ஒரு பொருள் தான் என்னிடமிருந்து அவனுக்குப் போய் மறுபடியும் எனக்கே வந்து சேர்ந்த பொருள். எனக்கு ஸ்கூல் சைக்கிள் கிடைத்தவுடன் அது எங்கள் சித்தப்பாவின் மக்கள் ஓட்டிப் பழகுவதற்காக அனுப்பியாகி விட்டது. அது போகட்டும்.
மறுபடியும் சைக்கிள் கிடைத்து விட்டதால், ஒயர் கூடையை சைக்கிளில் வைத்துக் கட்டிக்கொண்டு போனால் கல்லில் ஏற்றியிறக்கும்போது இங்க் பாட்டில் உடைந்து போகுமென்ற கருணையில் ஸ்கூல் பேக் வாங்கித் தந்தார் அப்பா. பொம்மையோ எழுத்தோ எதுவுமே இல்லாத கருப்பு நிறம். சிறியதும் பெரியதுமாக ஆறு ஜிப்புகள். சைக்கிள் கயிறும் சாவியும் ஒரு ஜிப்பில், இங்க் பாட்டில் ஒரு ஜிப்பில், அது இது என்று ஒரே அதகளம் தான்.
அதன்பிறகு பதினொன்றாவது வந்த பிறகு, "பெரிய இதுகள்" என்ற நினைப்பு தொற்றிக்கொண்டது. மறுபடியும் அடம்பிடித்து சனிக்கிழமை ஸ்பெஷல் கிளாஸ் கொண்டு போவதற்கென்றே ஒரு குட்டி பேக் வாங்கினேன். அவ்வளவு தான். அதன்பிறகு மேலே சொன்னதுபோல காலேஜில் சேரும்போது தான் ஒரு பக்கம் மட்டும் தொங்கவிடும் நீளமான கயிறு வைத்த பேக்-ம் ஒரு கோல்டன் கலர் வாட்ச்சும் அப்பா வாங்கித் தந்தார்.
இப்போது அதற்கும் இதற்குமென்று சிறியதும் பெரியதுமாகப் பலதும் சேர்ந்து விட்டது. இன்னும் கூட ஒரு பழுது இல்லாமல் வைத்திருக்கிறேன். "இந்த பேக் நான் "எம்.எஸ்சி" போகும்போது வாங்கியது" என்று யாரிடமேனும் காட்டினால், ஏலியனைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டுப் போகிறதுகள். என்ன தான் இருந்தாலும் ஒன்பதாவது படிக்கும்போது வாங்கிய நிறைய ஜிப் வைத்த பேக்-கைப் போல் இதுவரைக்கும் அமையவே இல்லை. அமையப்போவதும் இல்லை.
No comments:
Post a Comment