Powered By Blogger

Saturday, 24 August 2019


"நான் சொல்றேன்ல..."

   தற்செயலாக நாம் சந்திக்கும் ஒரு நபர் நம் வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடிய வல்லமையைப் பெற்று விடுகிறார். வாழ்க்கை முழுவதுக்கும் அந்த ஒரே ஒரு நபர் மட்டும் தான் அப்படி அமைவாரா அல்லது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நபர் அமைவாரா என்பதெல்லாம் தெரியாது. ஆனாலும் அந்த நபர் நாம் கடந்து வந்த எல்லோரையும் விட மிகவும் வித்தியாசமானவராகவோ அல்லது நம்முடைய சிந்தனைகளுக்கும் பண்புகளுக்கும் ஏற்றவராகவோ அமைந்து விடுகிறார். அவரால் மட்டுமே நம் பைத்தியகாரத்தனங்களையும், நம் குறைபாடுகளையும், நம் மனநிலை மாற்றங்களையும் புரிந்துகொண்டு சமாளிக்க முடிகிறது. இன்னும் அதிகமாகச் சொல்லப்போனால் யாருக்குமே அடங்காத நம் திமிர்த்தன்மையும் அவரது ஒற்றைச் சொல்லின் முன்னால் அடங்கிப்போய்விடுமளவு ஆற்றல் வாய்ந்தது. ஆனாலும் அவரின் எந்தச் சொல் நம்மைக் கட்டுப்படுத்தும் என்று அவரே உணராமல் தான் இருப்பார். 

  நமக்கும் அவருக்கும் முரண்பாடே ஏற்படாது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. மற்றவர்களைக் காட்டிலும் அவருடன் தான் நாம் அதிகம் சண்டை பிடிப்போம், சண்டைக்குப்பின் யார் முதலில் பேசுவது என்ற ஈகோ பிரச்சனைகளெல்லாம் அவருடன் தான் அதிகமாகத் தலையெடுக்கும். பேசாத போதும் முறைத்துக்கொண்டே அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டால் போதுமென்று தோன்றும். நம்மைச் செம்மைப்படுத்தும் ஒரு சில நபர்களில் அவர் முதலிடத்தில் இருப்பார். நாம் சோர்ந்து போகும்போது நீளுகின்ற முதல் கரம், எது வந்தாலும் நமக்காக நம்முடன் நிற்கும் முதல் நம்பிக்கை, நாம் நடக்கத் துவங்கும்போது நீளுகின்ற பாதை. நாம் எதை வேண்டுமானாலும் சொல்லிப் பகிர்ந்துகொள்ளலாம் என்றளவு பாதுகாப்பு உணர்வைத் தரும் மனிதர். என்றாலும், இருக்கும் வரையிலும் நம் மனதிற்கு அவர் எவ்வளவு நெருக்கம் என்று நாம் உணர்வதே இல்லை. 
    அவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்ற பிறகு அவரது நினைவுகளைப் பிரதிபலிக்கும் இடங்களையும் பொருட்களையும் நம்மால் மீண்டும் எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாகச் செய்து விடுகிறது. முட்டிக்கொண்டு வரும் கண்ணீருடன் அவர் விட்டுச் சென்ற இடங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்க்குமளவும் நம்மைப் பைத்தியமாக அடித்து விடுகிறது. மொத்தத்தில் ஒருவித மன முதிர்வை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது. அதன் பிறகு உங்கள் ஈகோ எங்கே பறந்தோடிப்போனதென்று உங்களுக்கே தெரியாது. அவருக்காக எப்போதும் எதையும் விட்டுக்கொடுக்கும் பக்குவம் வந்துவிடும். நாத்திகவாதிக்கும் கூடத் தீவிரமான தெய்வ நம்பிக்கையை ஊட்டுமளவு தாக்கத்தைத் தந்துவிடும். நாம் எப்படி நடந்துகொண்டால் அவருக்குப் பிடிக்குமோ அப்படி நம் பண்புகளும் குணங்களும் மாறத்துவங்கி விடும். அவருக்குப் பிரியமான செயல்களைச் செய்வதே நமக்குப் பிரியமாக மாறிவிடும். எனிலும், அப்படிப்பட்ட ஒருவரைச் சந்தித்துப் பிரியும்வரை, உங்களைத் தலைகீழாகக் கவிழ்த்துப்போடும் வல்லமை ஒரு மனிதருக்கு உண்டென்று நான் சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள் தானே...